Sanatana Dharma in modern times

மோதல்கள் நிறைந்த ஒரு கேள்விக்குறி 

இன்று காலை சில நண்பர்களோடு சேர்ந்து இந்து தெய்வங்களின் தோத்திரங்களை, துதிகளை, நன்கு உச்சரிக்க பழகிக்கொள்ள சிறிது நேரம் முதலீடு செய்து, வீட்டிற்க்கு நடந்து வந்து கொண்டிருந்த போது தோன்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்:

நாம் இன்று சந்திக்கும் மத்திய வருமான அல்லது உயர் தர வருமானம் உடைய இந்துக்களின் கோரிக்கைகள் என்ன என்று பார்த்தால், பரவலாக கீழ் கண்டவற்றை கூறலாம்:

(1) ஹிந்து மதம்/ சனாதன தர்மம் தழைக்கணும்

(2) இந்துக்கள் மதம் மாற்றப்படக்கூடாது.

(3) இந்து கோயில்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து வெளி வர வேண்டும்.

(4) இந்தியா ஒரு Hindu civilisational entity என்று பிரகடனம் செய்யப்பட வேண்டும்.​

(5) இந்திய கல்வி முறையில், பாட திட்டங்கள் , இந்து மதத்தின் புராதன பெருமைகளைப் பற்றி – நாகரிகம், கலாசாரம், பக்தி, கட்டிட திறன், கோயில்களின் பெருமை, சிற்பக்கலை – மாணவ, மாணவியருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

(6) இந்துக்களை,  அவர்களின் கலாசார, இலக்கிய சின்னங்களை, வெளி தேசங்களில் இருந்து படை எடுத்து வந்தவர்கள், எவ்வாறு அழித்து, இந்துக்களை, அவர்களது சிந்தனைகளை அடிமைப்படுத்தி, மாற்றினார்கள் என்பதை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள  வேண்டும்.

இதற்க்கு மேலும் பல கோரிக்கைகள், ஆசைகள் இருக்கலாம். இப்போதைக்கு, இந்த ஆறு கோரிக்கைகள்/இலட்சியங்கள் என் கட்டுரைக்கு, அது சொல்லப்போகிற கருத்துக்கு, போதுமானதாக இருக்கிறது.

எல்லா இந்துக்களும் இந்த ஆறு இலட்சியங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால், இல்லை என்று தான் கூற வேண்டும்.

சாதி வித்தியாசம், வேறுபாடு, ஏற்றத்தாழ்வு இன்னும் இருக்கிறது. ஒரு சிலர், அரசியல் காரணங்களுக்காக அவற்றை மிகப்படுத்தலாம். ஆனால், அவற்றை முற்றிலும் ஆதாரம் அற்ற மிகைப்படுத்தல் என்று கூற முடியாது.

இது தவிர,வேறு பல வேறுபாடுகளும் இருக்கின்றன – சர்ச்சைக்கு உட்படாத, சர்ச்சைகள் அற்ற வேறுபாடுகள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள், உருவ வழிபாட்டை பின்பற்றுவர்கள், பண்ணாதவர்கள், மறு பிறப்பில் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள், – என்று பல வேறுபாடுகள். இவை ஒரு சிறிய அளவிலான உதாரணங்களே.

ஆனால், மேலை அல்லது மேற்கத்திய கலாச்சாரம், நாகரிகம் இவற்றின் தாக்கம், ஆதிக்கம் வருவதற்கு முன்னால், இந்த வேறுபாடுகள், இந்து மதத்தினரிடையே பெரும் பிளவை ஏற்படுத்தவில்லை என்று சொல்லலாம்.

சொல்லப்போனால், இன்று இந்திய நாடு என்று ஒரு எல்லைக்குள் வரைபடுத்தப்பட்ட மக்கள், தங்களை இந்துக்கள் என்று ஒட்டு மொத்தமாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை, அறிவித்துக்கொள்ளவும் இல்லை.

வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், பொதுவாக அவர்களுக்குள் ஒரு ஆதார பிணைப்பு, ஒரு பொதுவான civilisational, கலாசார இணைப்பு இருந்தது.

எனக்கு தெரிந்த மட்டில், இன்றைய நிகழ் காலத்தில், இரண்டு புத்தகங்கள் இந்துக்களின் கலாசார ஒற்றுமையை நன்கு விளக்கியிருக்கின்றன:

(1) ‘India: A Sacred Geography’ (Diana Eck)

(2) ‘The land of Seven Rivers’ (Sanjeev Sanyal)

வேறு புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இருந்தால் தெரியப்படுத்தவும். நன்றி உடையவனாக இருப்பேன்.

இந்த ஒரு எளிதான, ஆனால் அடித்தளத்தில் வலிமையான பிணைப்பு, நவீன தேசம்- அரசு (Modern Nation-State) அமைப்பிற்கு ஏற்றது அல்ல.

சனாதன தர்ம வழிமுறை, போக்கு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், நம்பிக்கை இல்லாமை, எல்லாமே பெரும்பாலும், தன்னிச்சையாக, காலப்போக்கில், நடைமுறையில் பின்பற்றப்பட்டு ஊறிப்போனவை. ஒரு அதிகாரத்தினாலோ, ஒரு அமைப்பின் ஆணையின் பேரிலோ, நடைமுறைக்கு வந்தவை அல்ல. அதனால் எல்லோரும் இந்துக்களே.

ஆனால், சற்று உட்கார்ந்து யோசித்தோமேயானால், இன்றைய நவீன தேசம்-அரசு எவ்வாறு செயல்படுகிறது? சனாதன தர்மத்தின் வழிமுறைகளும், இந்த நவீன தேசம்-அரசின் செயல்பாடுகளும், ஒன்றிப்போகின்றனவா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஜனத்தொகை பெருகிப்போன காலத்தில், எல்லோரையும் ஒன்றாக செயல்பட வைக்க ஒரு அரசாங்கம், ஒரு சட்ட-திட்ட அமைப்பு, போலீஸ், ஒரு command-and-control,  accountability, இவை எல்லாம்  தேவைப்படுகிறது.

நவீன தேசம்-அரசுகளுக்கான இந்த தேவைப்பாடுகள் Abrahmic மதங்களான கிறித்தவ, இஸ்லாம்  இரண்டின் கோட்பாடுகள், வழிமுறைகள், தெளிவான கட்டுப்பாடுகள் இவைகளோடு ஒத்துப்போகின்றன. அந்த மதங்களுக்கு ஒரு கடவுள், ஒரு புத்தகம், ஒரு ஸ்தாபனம் என்று இருக்கிறது.

தவிர, மனிதனின் பரிணாம வளர்ச்சியானது, காலப்போக்கில் அவனில் ‘நான், தான், எனது, என்னுடைய’ என்ற எண்ணங்களை உருவாக்கியது. Egoவின் ஆதிக்கம் அதிகரித்தது. இன்று நம்மிடையே பரவியிருக்கும் தொழில் நுட்ப (technological developments) வளர்ச்சியானது இந்த Egoவை, ஊதி பெரிதாக்க பெரிதும் உதவுகின்றன – Facebook, Twitter and Selfie.

குறுகிய எல்லைகளை உருவாக்கிக்கொண்ட மனித ‘மன வளர்ச்சிக்கும்’, தேசம்-அரசுகள் உருவாக்கிக்கொண்ட எல்லைகளுக்கும் பெரிதான வித்தியாசம் இல்லை. சொல்லப்போனால், மனிதனின் மனதில் உதித்த அந்த ‘நான், தான், எனது, என்னுடைய’  என்ற எண்ணங்களின் பெரிய அளவிலான வெளிப்பாடே எல்லைகளை கொண்ட தேசம்.

இதை நான் தவறு அல்லது சரி என்றோ கூற விரும்பவில்லை. இந்த என் சிறு கட்டுரையின் நோக்கமும் அது இல்லை. இது நாம் சந்திக்கும் நிதர்சன உண்மை. அவ்வளவே.

ஆனால், இதன் விளைவு என்னவென்றால், இந்த நவீன காலத்தின் எண்ணப்போக்கிற்கு, சனாதன தர்மத்தின் சுதந்திரமான, தன்னிச்சையான (spontaneous and naturally evolving) போக்கு பொருத்தமற்றதாகி விட்டது.

மற்றும், சனாதன தர்ம பல தரிசனங்களின் இறுதி நோக்கம் என்னவென்றால் பரம்பொருளோடு ஐக்கியமாவதே அல்லது  தானும், மற்ற ஜீவ ராசிகளும், பரம்பொருளும் வேறு அல்ல என்று உணர்வதே.

இந்த அற்புதமான நோக்கத்திற்கும், ‘நான், தான், எனது, என்னுடைய’ என்ற போக்கை முன் வைக்கும் சமுதாயத்திற்கும், இந்த எண்ணங்களை அஸ்திவாரமாக கொண்ட நவீன தேசம்-அரசிற்கும் தொடர்பே இல்லை.

அதனால், சனாதன தர்மம் பல இன்னல்களை, தடைகளை, மோதல்களை சந்திக்க நேர்வதில் அல்லது சந்தித்ததில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. சனாதன தர்மத்தை இந்த யுகத்தின் இத்தகைய குறுகிய தர்மத்தின் மத்தியில் நிலை நாட்ட முயல்வது ஒரு பிரும்ம பிரயத்தனமே.

மேலும் இந்து மதத்தின் தொடர்ந்து நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க பல தரப்பட்ட இந்து சமய மக்களின் பெரு மதிப்பு, பேராதரவை பெற்ற, நாடு தழுவிய சமய மற்றும் சமுதாய தலைவர்கள் இன்று இல்லை என்று தான் கூற வேண்டும். அதனால், இந்துக்களின் ஒற்றுமையின்மை தவிர்க்க முடியாத, நிலைக்கும், நீடிக்கும் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், சனாதன தர்ம மதத்தை அரசியல், சமுதாய ரீதியாக நிலை நாட்ட முயல்பவர்களின் குறிக்கோள், மற்ற மதத்தினரோடு மோதல்களை மட்டுமே உருவாக்கும். வெற்றி நிச்சயம் இல்லை.

அதனால், உலகளாவிய, அல்லது இந்திய தேசம் மட்டுமே ஆன அரசியல் ரீதியான வெற்றி அடைவது கடினம். வெற்றி பெற்றால், அதை தக்க வைத்துக்கொள்வதும் எளிது அல்ல. இந்தியாவில் தற்போது உள்ள அரசாங்கம் சந்திக்கும் இன்னல்களுக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். (இந்த அரசாங்கத்திற்கும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் கட்சிக்கும் பெரும் பங்கு உண்டு என்பதும் உண்மை.)

கலாச்சார, நிர்வாக ரீதியாகவும், சனாதன தர்மத்தின் வழிமுறை நவீன காலத்திற்கு ஏதுவாக அமையவில்லை என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஆகையால், இந்த கலி யுகத்தில், சனாதன தர்மத்தின் போக்கு, போராட்டங்கள், மோதல்கள் நிறைந்த கேள்விக்குறியாகவே இருக்கும்.

[‘நான், எனது, என்னுடைய’ என்ற வட்டங்களை உடைத்துக்கொண்டு வருபவர்களுக்கு, தனிப்பட்ட முறையில், சனாதன தர்மம் தொடர்ந்து கலங்கரை விளக்காக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை].

2 thoughts on “Sanatana Dharma in modern times

  1. Pingback: The Gold Standard

  2. Pingback: India as a leading power – The Gold Standard

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s